சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை!


சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை!


நடிகை சமந்தாவுக்கு இன்று 35 வது பிறந்தநாள்.

இன்றைய தேதியில் சினிமாவில் நுழையும் பெண்களுக்கு ஆதர்ஷமாக இருப்பவர்களில் சமந்தா முதன்மையானவர். குறுகிய காலத்தில் இந்த இடத்தை அவர் வந்தடைந்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவரது திறமையும், துணிச்சலும் என்றால் மிகையில்லை.

சமந்தாவின் அப்பா தெலுங்கர். அம்மா ஆலப்புழாவைச் சேர்ந்த மலையாளி. சமந்தா படித்ததும் வளர்ந்ததும் சென்னையிலுள்ள பல்லாவரம். தெலுங்கு, மலையாளம், தமிழ் என கலவையான பின்னணியில் சமந்தாவின் இளமை வாழ்க்கை அமைந்தது. சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் பிறகு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் சமந்தா படித்தார். டிகிரி முடிக்கும் காலகட்டத்தில் மாடலிங், விளம்பரப் படங்கள் என நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் நடித்த விளம்பரங்களில் நாயுடு ஹால் விளம்பரம் முக்கியமானது.

 

விளம்பரத்தில் சமந்தாவைப் பார்த்த மூன்றாவது நிமிடமே அவரை தனது சினிமாவில் நடிக்க வைப்பது என முடிவு செய்ததாக ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ரவி வர்மன் கூறியுள்ளார். இவர்தான் தனது மாஸ்கோவின் காவிரி படத்துக்காக முதல்முதலில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தவர். 2007 ஆகஸ்டில் இது நடந்தது. அந்தப் படத்தில் சமந்தா நாயகியாக நடித்தார். ரவி வர்மனுக்கும் படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, மாஸ்கோவின் காவிரியை வேண்டுமென்றே கிடப்பில் போட்டார் ரவிச்சந்திரன்.

 

அந்த தாமதம் சமந்தாவுக்கு சினிமாவில் அதிர்ஷ்டத்தையே தந்தது. கௌதம் வாசுதேவ மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தார். தமிழில் த்ரிஷா நாயகி. சின்ன வேடத்தில் சமந்தா வருவார். அதன் தெலுங்குப் பதிப்பில் சிம்புவுக்குப் பதில் நாக சைதன்யா நாயகன். நாயகி சமந்தா. ஈ மாய சேசவே என்ற அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமந்தாவுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும், நந்தி விருதும் கிடைத்தது. அடுத்து அதர்வாவுடன் பாணா காத்தாடி படத்தில் நடித்தார். அந்தப் படமும் பரவலான வரவேற்பை பெற்றது. 2010 இல் அவர் முதலாவதாக ஒப்பந்தமான மாஸ்கோவின் காவிரி வெளியாகி தோல்வியடைந்தது.

 

தெலுங்கில் ஒரே படத்தில் முன்னணி நடிகைகளின் வரிசைக்கு சென்றார் சமந்தா. முக்கியமாக 2010 இல் ஜுனியர் என்டிஆருடன் பிருந்தாவனம் படத்தில் நடித்தார். சமந்தா ஒரு நாயகி, காஜல் அகர்வால் இன்னொரு நாயகி. வம்சி பைடிபள்ளி இயக்கிய பிருந்தாவனம் பம்பர்ஹிட் படமாக அமைந்தது. அதற்கு அடுத்த வருடமே மகேஷ்பாபு ஜோடியாக தூக்குடு படத்தில் நடித்தார். அதுவும் பம்பர்ஹிட். 2012 இல் ராஜமௌலியின் ஈகா திரைப்படம். தமிழில் இப்படம் நான் ஈ என்ற பெயரில் வெளியானது. இந்தியாவில் உள்ள முக்கியமான ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

அதே வருடம் கௌதம் வாசுதேவ மேனன் நீதானே என் பொன்வசந்தம் படத்தை தமிழில் ஜீவாவை வைத்தும், தெலுங்கில் நானியை வைத்தும் எடுத்தார். இரண்டிலும் நாயகி சமந்தா. இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெற்றார் சமந்தா. இப்படி ஒரே வருடத்தில் இரண்டு மொழிகளில் சிறந்த நடிகை விருது வாங்குவது அபூர்வம்.

 

சமந்தாவின் தமிழ் சினிமாக்கள் அவரை அடிக்கடி ஏமாற்றினாலும் தெலுங்கில் அவர் வேகமாக முன்னேறினார். சீதாம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு, அத்தரின்டிகி தாரேதி, மனம் என அடுத்தடுத்தப் படங்கள் ஹிட்டாக முன்னணி நட்சத்திரமானார். தமிழில் கத்தி, தெறி, மெர்சல் என முக்கியமான படங்கள் அமைந்தன. இந்த காலகட்டத்தில் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். முதல் படம் ஈ மாய சேசவே படத்தில் சேர்ந்து நடித்த போதே நாக சைதன்யா சமந்தாவிடம் காதலில் விழுந்தார். பிறகு மனம் படத்தில் அது மேலும் நெருக்கமானது. பெற்றோர் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் 2017 இல் நடந்தது.

 

அக்கினேனி குடும்பத்தின் மருமகளாகப் போவது என்பது பலருக்கும் கனவு. நகார்ஜுனாவை அமலா திருமணம் செய்து கொண்டபின் அவர் நடிப்பதை நிறுத்தினார். இன்றுவரை அக்கினேனி குடும்பத்தின் பெருமைமிகு மருமகளாக திகழ்கிறார். சமந்தாவும் அப்படியொரு மருமகளாக இருக்க வேண்டும் என்பதே அந்த குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. பல்லாவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணிற்கு அக்கினேனி குடும்பத்தின் மருமகளாவதே மிகப்பெரிய சாதனை தான். ஆனால், சமந்தாவின் விருப்பங்கள் மருமகள் என்ற பதவிக்கு தடையாக இருந்தன. 2021 இல் பரஸ்பரம் விவாகரத்தை அறிவித்துக் கொண்டார்கள். இதன் பிறகு சமந்தா முற்றிலும் மாறுபட்டவராக வெளிப்பட்டார்.

 

விவகாரத்து எந்தப் பெண்ணையும் சோர்வடையச் செய்யும். துணிச்சலை முடக்கும். ஆனால், சமந்தா விவாகரத்து அறிவிப்புக்குப் பின் மேலும் துணிச்சல் பெற்றார். ஏற்கனவே அவர் நடித்த ஜானு, ஓ பேபி, யு டர்ன் போன்ற நாயகி மையப் படங்கள் அவரது நடிப்புத் திறமையை தென்னிந்தியா முழுக்க தெரியப்படுத்தியிருந்தது. இந்தியில் அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் சீஸன் 2 இந்திய அளவில் அவரது திறமையை கொண்டு சென்றது. பான் இந்தியா ஸ்டாராக அவர் உயர்ந்தார். புஷ்பாவில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடினார். படத்தின் நாயகியைவிட அந்த ஒரே பாடலில் புகழ்பெற்றார்.

 

அடுத்து தெலுங்கில் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் சாகுந்தலம், யசோதா இரண்டும் நாயகி மையப் படங்கள். ஆங்கில் படமொன்றிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் இன்று வெளியாகிறது. விவாகரத்து விவகாரம், கவர்ச்சியாக உடையணிவதால் ஏற்படும் சர்ச்சைகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், முன்னோக்கி செல்கிறார் சமந்தா. தன்னை விமர்சிப்பவர்களுக்கு அவர் அளிக்கும் பதில், காத்து வாக்குல ஒரு காதல் ட்ரெய்லரில் அவர் சொல்லும் அந்த வார்த்தைதான், போடா!

Comments

Popular posts from this blog